ஆளும் அதிகாரமும் எங்களுக்குத் தேவை - பிரெக்டின் கவிதை

எப்பொழுதெல்லாம் எங்கள்

மேலாடை கந்தலாகிறதோ,

அப்பொழுதெல்லாம் நீங்கள் 

ஒடி வந்து முழங்குகிறீர்கள்

 

‘ இது இனியும் நீடிக்கக் கூடாது

முடிகின்ற எல்லா வழிகளிலும் 

உதவி செய்வோம்.

நீங்கள் உற்சாகமாக

எஜமானரிடம் ஓடுகிறீர்கள். 

நாங்கள் காத்துக்

கொண்டிருந்தோம்.

நீங்கள் வெற்றிகரமாக

எங்களுக்கு பெற்று வந்ததைக்

காட்டுகிறீர்கள்,

ஒரு துண்டுத் துணியை !

 

நல்லது ; துண்டுத்

துணி சரிதான்.

ஆனால்,

முழு ஆடை எங்கே ?

 

எப்பொழுதெல்லாம்

பசித்தீயால்

கருகிக்  கரைகிறோமோ

ஓடி வந்து முழங்குகிறீர்கள்.

 

‘இது இனியும் நீடிக்கக் கூடாது

முடிகின்ற எல்லா வழிகளிலும் 

உதவி செய்வோம் 

உற்சாகம் நிரம்பியவர்களாய்

நீங்கள்

எஜமானரிடம் ஓடுகிறீர்கள் ;

நாங்களோ

பசித்தீயில் கருகியபடி

காத்துக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள்

திரும்பி வந்து வெற்றிகரமாக

எங்களுக்குப் பெற்று

வந்ததைக் காட்டுகிறீர்கள்.

நாலு பருக்கைகள்.

 

நல்லது ; பருக்கைகள் சரிதான்.

ஆனால் முழுச்சாப்பாடுஎங்கே?

 

எங்கள் தேவை

துண்டுத் துணி அல்ல;

முழு ஆடை.

பருக்கைகள்;

முழுச்சாப்பாடு.

ஒரு வேலை மட்டுமல்ல :

முழுத் தொழிற்சாலையும்

எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப் பொருள்,

உலோகக் கனி

அத்தனையும்

எங்களுக்குத் தேவை.

எல்லாவற்றையும் விடமேலாக

நாட்டினை

ஆளும் அதிகாரமும்

எங்களுக்குத் தேவை.

நல்லது

இவ்வளவும்

எங்களுக்குத் தேவை.

ஆனால்

நீங்கள் கொடுப்பது என்ன?

 

-பிரெக்ட்

No Response to "ஆளும் அதிகாரமும் எங்களுக்குத் தேவை - பிரெக்டின் கவிதை"

இதை உங்கள் பதிவில் இணைக்க...