புரட்சியின் நூலகம் போயஸ் தோட்டமா ?
புவியில் முளைத்த ஒரு புல்லும் ஏற்குமா ?
வறட்சியில் குடிக்கக் கூவம் நீரா ?
வறுமையில் இரப்பதைச் சரியென் பீரா ?
‘டெஸ்மா’ ‘பொடா’வின் தேச நாயகி
டெல்லிக் கனவில் உறங்கும் பூதகி
பஸ்மா சூரனின் இன்றைய மாதிரி
பாதம் சுமக்கவா புதிய கூட்டணி ?
அரசு ஊழியர் உரிமை பறித்ததும்
அடி பணிந்தோர் முதுகில் உதைத்ததும்
முரசு அறைந்தது சொல்லவும் வேண்டுமா ?
முணுமுணுப்பொலியே உம்காதைத் தீண்டுமா ?
தொழிலாளர் நலனைத் துவட்டி எடுத்ததும்
தோழமை உணர்வை உண்டியல் என்றதும்
எழுத்தாய் ஈரமாய் இன்னமும் உள்ளதே!
ஏனிந்த மாற்றம், புரியவில்லையே ?
சேதுக் கால்வாய் தடைக்கல் மீது
சினத்தைப் பொழிந்ததில் அர்த்தம் ஏது?
தீதும் நன்றும் எடுத்து உரைப்பினும்
திரும்பிப் பார்ப்பரோ மக்களிப்போது ?
சிந்தனை புதிதாய்த் துளிர்த்திடல் வேண்டும்
செய் தக்க எண்ணுக தோழர்களே !
நிந்தனை புரியும் நிலையிலும் கூட
நீர்த்திடல் வேண்டாம் மார்க்சின் மகத்துவம் !
- விமுனா மூர்த்தி
(நன்றி :எதிரொலி நாளிதழ் - 08.01.2009 அன்று வெளியான கவிதை)
விமுனா மூர்த்தி தொழிலில் மருத்துவர். பகுத்தறிவு, பொதுவுடைமை,சமூகநீதி, தமிழ்த்தேசியம் ஆகிய தளங்களில் இவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்கா. அப்பணியில் அவரின் கவிதை பதிவின் மாதிரியே இப்பா.
No Response to "‘டெஸ்மா’ ‘பொடா’வின் தேச நாயகி"
Post a Comment