மகளிர் தினக்கவிதை-படையெடுப்பாய் பெண்ணினமே..
6:57 AM
தோழன்
என்ன பாவம் செய்தேன் நான்?
மண்ணில் ஒரு மங்கையெனப்பிறந்ததை விட
என்ன பாவம் செய்தேன் நான்...?
பருவமடையும் முன்னே
என்னை நோக்கி நீளும்
பார்வை விரல்களினால்
நெளியும் என் கூச்சங்களை யாரறிவார் இங்கே ?
பருவமடைந்த பின்னால்
என்னைச்சுற்றி வட்டமிடும் விரச
உறவுகளின் மாயவலை விரிக்கும்
வார்த்தைச்சகதிகள் பற்றி யாரறிவார் இங்கே ?
பேருந்தில்
உரசப்படும் என் கற்பின் நுனியில்
நடு நடுங்குகிறது உயிர்..
சந்தையில்
மிகுதிப்பணம் தருவதாக
என் கை தீண்டும் கடைக்காரன்
என் அப்பா வயதில் இருக்கும்போது
எப்படி செருப்பெடுத்து அடிப்பது ?
வேலை தேடி அலையும் வயதில்
"ஒத்துழைக்கச்" சொல்லி
ஒத்தூதும் உலகில்
எனக்கான சுதந்திரம் எந்தத்தீயில் எப்படிச்சாம்பலானது ?
திருமணத்தின் பின்னும்
"வீட்டுச்சாப்பாடு" சரியில்லையென்றால்
பந்தி விரிக்கத்தயார் என்னும்
படுபாதகர்களின் மோகப்பார்வைகளுக்கு
விலங்கிடுவது யார் ?
என்ன உலகமடா இது?
பட்டினியை போக்குகிறேன்-உன்
பத்தினியை தா என்னும்
பைத்தியங்கள் வாழும் வரை-எம்
பெண்ணினமே எங்கு போவோம் நாம்..?
அழுதுவிட்டு அடுப்பூதிய
பழுதுபட்ட காலம் உடைத்து
பழி தீர்க்கும் நெருப்பெடுத்து
கழிசடைகள் சுட்டுப்பொசுக்கு...
எதிர்காலம் உன் கையில்
பொலிவுடனே சுடர்விடவே
எண்திசையும் அதிரும் வண்ணம்
படையெடுப்பாய் பெண்ணினமே..
நிந்தவூர் ஷிப்லி
Subscribe to:
Post Comments (Atom)
2 Response to மகளிர் தினக்கவிதை-படையெடுப்பாய் பெண்ணினமே..
mokkai
மகளிர் நாள் கவிதை சிறப்பு வலைப்பூ வடிவமைப்பு மிகவும் அற்புதம். பாடல்களை எப்படி சேர்ப்பது.
Post a Comment