பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
காலனிப் பெண்ணுடன் ஓடியவன்
திரும்பி வருகிறேன்.
ஒத்தையடிப்பாதைகள் சிமெண்டு சாலைக்கு
மாறி இருக்கிறது.
மாடி கட்டிடமாக உயர்ந்துள்ளது
நான் படித்த பஞ்சாயத்துப் பள்ளி..
இறவைக் கிணறு மேல் நிலைத் தொட்டியாக
மாறியுள்ளது.
கட்சிக் கொடிகளைவிட
சாதிக் கொடிகள் உயரத்தில்..
நான் பார்த்த செங்கொடிகள்
கருப்புக்கொடிகள் எங்கே?
வெறுங்காலுடன் ஒடியவன்
ஷூவுடன் நடந்துவருகிறேன்.
ஊரில் இருந்த பெரியார் சிலை அதே இடத்தில்
உடைபட்டு கிடைக்கிறது.
தலையில் காகத்தின் எச்சங்கள்...
காலனிக்கு வெளியே
அம்பேத்கர் கம்பிவேளிக்குள் சிறைப்பட்டுள்ளார்...
எல்லாமே மாறி இருக்கிறது.
இடுகாட்டில் நடப்பது போல
நடந்துபோகிறேன்....
.
1 Response to ஊரைவிட்டு ஓடியவன்.... கவிதை
கவிதை மிக மிக அழகு..
வாழ்த்துக்கள்..
Post a Comment