பை ----ஜெயபாஸ்கரன் கவிதை

கண்ணிமைக்கும் நேரத்தில்
எனது கைப் பையைக்
களவாடிப் போனவனைக் குறித்து
கவலையாக இருக்கிறேன் நான்

என்னால் யூகிக்க இயலாத
ஏதோ ஒரு இடத்தில் வைத்து
அதைப் பிரித்த அவன்
எப்படியெல்லாம் குழம்பியிருப்பான்

கொடுத்த கடனைக் கேட்டு
என்னை மிரட்டிக் கொண்டிருக்கும்
இந்த வாரத்திற்கான
அந்த கடித்திற்கு
என்ன பதில் எழுத இயலும் அவனால்?

இப்போதைக்குத் தர இயலாமைக்கான
காரணங்கள் எல்லாவற்றையும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக
நான் எழுதித் தீர்த்துவிட்டதை
எப்படி அறிவான் அவன்

அவனையும் அழைக்கும்
இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை
என்ன செய்யப் போகிறான்?

மதிப்புரைக்கு வந்திருந்த
அந்த இரண்டு நூல்களைப்
பாராட்டித் தொலைப்பானோ ஒரு வேளை!

எக்கேடும் கெடட்டும்...
பையைக் களவாடியது குறித்து
அவனுக்கொரு துயரமும்
களவுகொடுத்தது குறித்து
எனக்கொரு மகிழ்ச்சியும்
என்றைக்கும் எஞ்சியிருக்கும்

இனி,
கைப்பையைத் திருட
அவன் துணியும் போதெல்லாம்
ஒருவேளை அது
என் பையாக
இருந்துவிடுமோ என்று
அஞ்சியே தீர வேண்டும்
அவன்.

- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_1960@rediffmail.com)

1 Response to பை ----ஜெயபாஸ்கரன் கவிதை

June 26, 2009 at 11:07 AM

நன்றாக உளது வாழ்துக்கள்

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger